வாட்சைப் பார்த்தேன். மணி எட்டேமுக்கால் என்றது. அலுவலகத்திலிருந்து கிளம்பி, பஸ் ஸ்டாப் போனேன். உமா வேலை முடிந்து பஸ்ஸில் வந்திறங்கி, எனக்காக காத்துக்கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்.
வீட்டினுள் சென்றதும் வீடு இருந்த கோலத்தைக் கண்டு முகம் மாறினாள்.
"மீரா”
“என்னம்மா?”
“ஆறாங்க்ளாஸ் போற நீ... இன்னும் சின்னக் குழந்தை மாதிரி வீட்ல ஒரு வேலையும் செய்யாம வீட்டை எப்படி வெச்சிருக்க பாரு.”
“இல்லம்மா.. ஹோம் வொர்க் செய்ய லேட் ஆயிடுச்சு.. அதுமில்லாம ஏழு மணிக்கு போன கரண்ட் இப்போதாம்மா வந்தது..”
"இங்க பாரு.. டீப்பாய் எந்த இடத்துல இருக்குன்னு.. ஏன் இப்படி நடுக்கூடத்துக்கு வந்துது?"
"இல்லம்மா, கரண்ட் போனப்ப எமர்ஜன்சி லைட்-கிட்ட வெச்சு எழுதறதுக்காக நான்தான் தள்ளி வெச்சேன்"
"ஐயோ... என்னடி இது டிரெஸ்ஸை கழ்ட்டி வாஷிங் மிஷின்ல போடாம இப்படி பெட் மேல போட்டு வெச்சிருக்க?"
"இதோ.. எடுத்துப் போட்டுடறேன்மா"
உமா ஒவ்வொன்றாகத் திட்ட மீரா பயத்துடனும், நடுக்கத்துடனும் அவள் சொன்ன வேலைகளை செய்து கொண்டே இருந்தாள்.
எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. சின்னவள் மேகா எங்கே அடுத்து தனக்கு ஏதாவது திட்டு விழுமோ என்று பரிதாபமாக அக்கா செய்யும் வேலைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.
உடை மாற்றி விட்டு சமையலறைக்குள் போன உமா மீண்டும் "மீரா" என கத்தினாள்.
இந்தமுறை மீரா வந்து நின்றபோது அவள் கால்கள் நடுங்கியதை நான் கவனித்தேன்.
"எ..எ..என்னம்மா" மீராவின் குரல் உடைந்திருந்தது.
"லஞ்ச் பாக்சைகூட க்ளியர் பண்லியா நீ?"
"அம்.. அம்மா.. ப்ளீஸ்மா.. ஒரு பத்து நிமிஷம் சோபால உக்காரும்மா. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிடறேன்"
"போ.. மீரா" வெறுப்புடன் சொல்லிவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு சோபாவில் போய் அமர்ந்த அம்மாவைப் பார்த்து கண்ணில் நீர்வர நின்றுகொண்டிருந்தாள் மீரா.
"ஏம்ப்பா.. குழ்ந்தையை திட்டற?" நான் வாய் திறந்தேன்.
"காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கெல்லாம் ரெடி பண்ணிட்டு ஏழு மணிக்கு கிளம்பி வேலைக்குப் போய், நைட் ஒம்பது மணிக்கு வந்து வீடு இந்தக் கோலத்துல இருந்தா நான் பேசாம இருக்கணும். அப்படித்தானே?"
நான் ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டேன்.
மீரா டிபன் பாக்சை சிங்க்-ல் போட்டுவிட்டு, வீடு முழுவதும் பெருக்கினாள். அம்மாவின் பக்கமே செல்லாமல் அக்கா பின்னாலேயே நடந்து, அவள் கூட்டும் போது, அங்கங்கே இருக்கும் பொருட்களை எடுத்து வைத்து உதவிக் கொண்டிருந்தாள் மேகா.
அவள் எல்லா வேலைகளையும் செய்து விட்டு சோபாவில் கண்மூடிப் படுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் போய்.. "அம்மா.. எழுந்திரும்மா.." என்று எழுப்பினாள். உமா எழுந்து சமையலறை சென்றுவிட, தனியாக நின்று கொண்டிருந்த மீராவை என்னருகில் அழைத்து அமரச் சொன்னேன்.
"ஏன் குட்டிம்மா.. எப்பவுமே அம்மாகிட்ட எவ்ளோ நல்ல பேர் வாங்குவ.. இன்னைக்கு ஏன் இப்படி திட்டு வாங்கற?"
நான் கேட்டதை கவனிக்காமல் அவள் கண்கள் எங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.. அவள் கண்கள் பார்த்த திசையை நோக்கினேன்..
ஒரு பட்டாம்பூச்சி வீடு முழுவதும் சுற்றுவதும், ட்யூப்லைட்-ல் அமர்வதுமாய் விளையாடிக் கொண்டிருந்தது.
"மீரா" நான் அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயற்சித்தேன்..
"என்னப்பா"
"ஏன்ப்பா இப்படி அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கற-ன்னு கேட்டேன்"
"இல்லப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு, ட்யூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் இதெல்லாம் பண்ணீடுவேன். இன்னைக்கு என்னாச்சுன்னா.." சொல்லிக் கொண்டே வந்தவள் திடீரென கண்கள் விரிய..
"மேகா.. மேகா. அங்க பாரு அந்த பட்டர்ப்ளை உன்னோட ஸ்கூல்பேக்-ல உக்காந்துடுச்சு"
"ஐ!" - மேகா உற்சாகமானாள்.
"இன்னைக்கு என்னாச்சு? என்னமோ சொல்ல வந்த?"
"இதோ.. இந்த பட்டர்ப்ளை இருக்குல்லப்பா.. அது வீட்டு முழுக்க பறந்துட்டு இருந்ததுப்பா.. அதப் பார்த்துட்டு இருந்ததுல பண்ணாம விட்டுட்டேன்ப்பா.. அதுக்கப்புறம் கரண்ட் வேற போச்சா.. பண்ண முடியல" என்றவள்...
"ஐ! மேகா.. இப்போ அது உள்ள போகுது.. என்னோட பேக்-ல உக்காருதா-ன்னு பாக்கலாம் வா" என்று எழுந்து ஓடினாள்.
எனக்கு பேச்சே வரவில்லை.