வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை (Vellore Santhai) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)

  

வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)

 

தெக்க செமதாங்கியில் இருந்து வடக்க ஜக்கார்பாளையம் போற இட்டேரி வரைக்கும் ரெண்டு மைல் தூரம், மேக்க வீதம்பட்டி இட்டேரில் இருந்து கெழக்க புதூர் போற இட்டேரி வரைக்கும்னு நொம்பப் பெரிய ஊர் வேலூர். 

மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட்டி. கொஞ்சம் வடக்க சாஞ்சாப்புல போனா ஜக்கார் பாளையம். கெழக்க சலவநாய்க்கன்பட்டிப் புதூர், கெழக்கயே கொஞ்சம் பக்கவாட்டுல போனா வாகத்தொழுவு சங்கமநாய்க்கன் பாளையம், அரசூர்னு பல ஊர்களுக்கு நடுவுல சிறப்பா இருக்குற ஊர்தான் வேலூர். 

அந்த வழியா செஞ்சேரி மலைக்குப் போன வேலவன் இந்த ஊர் இருக்குற இடத்துல தன்னோட வாகனமான மயிலை விட்டு இறங்கி தன்னோட வேலையும் நட்டு வச்சுட்டு, சுத்து பத்து கிராமத்தைச் சேந்தவர்களுக்கு அருள் பாவிச்சதாகவும், அதனாலதான் இந்த ஊருக்கு வேலூர்னு பேர் வந்ததாகவும் ஒரு ஐதீகம். 

ஊருக்குள்ள ஏராளமான அரசமரம் வேப்பமரம் புளியமரம், புங்கமரம், ஆலமரம், ஆவரம்பூ, ஒரே பசுமையாவும் பொலிவாவும் களைகட்டி இருக்கும் இந்த ஊர். தலைவாசல்ல இருக்கிறது பெரிய விநாயகர் கோயில். முன்னாடி பெரிய மைதானம். மைதானத்துல அரசமரம் வேப்பமரம் ஒண்ணா வளர்ந்து இருக்குற ரெண்டு மேடைகள் ஊர்சனங்க எல்லாம் ஒண்ணு விநாயகர்கோயில் திண்ணைல, இல்லாட்டி இந்த மேடைலதான் இருப்பாங்க எப்பவும் நிழலும் காத்துமா குளுமையா இருக்கும் அந்தக் கோயிலடி. 

கோயிலுக்குள் வலதுபொறம் சந்தைப்பேட்டை. சுத்துபத்து கிராமங்களுக்கும் வாரம்வாரம் திங்கக்கிழமை இங்கதான் சந்தை. கோயிலுக்கு இடது புறம் திண்ணைப் பள்ளிக்கூடமா இருந்து வளர்ந்து இருக்குற பள்ளிக்கூடம். அந்தக் காலத்துல எல்லாம் பட்டம் படிச்சவங்களைப் பார்க்கவே முடியாதாம். ஆனா இந்த பள்ளிக்கூடத்துல படிச்சவங்க அப்பவே பட்டம் வாங்கி இருந்தாங்களாம். அதுல தாமோதரசாமி அய்யாவும் ஒருத்தர். "பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்" ஆனா அந்தப் பாம்புகூட தாமோதரசாமி அய்யாவைக் கண்டா வணக்கம் போடுமாம். 

அந்த அளவுக்கு அவர் பண்பானவர். ரொம்ப நல்லவர் அப்பேர்ப்பட்ட நல்லவரை பெத்த ஊர்தான் வேலூர். 

இப்படிப்பட்ட ஊர்ல சரவணசாமி அய்யான்னு ஒருத்தர் அவரும் ரொம்ப நல்லவர். நெறஞ்ச மனசுக்கு சொந்தக்காரர். தோட்டத்துல குடியிருந்துட்டு விவசாயம் பார்க்கிறவர் திங்கக்கிழமை ஊருக்குள்ள வந்து தானிய வியாபாரம் பண்ணுற அந்தியூர் அய்யாகிட்ட, தான்வித்த இராகி பத்து மூட்டைக்கு உண்டான தொகை ஆயிரத்து முந்நூறு ரூவாவை வாங்கிட்டு சந்தைக்கு போறார். 

சரவணன் அய்யாவுக்கு இயற்கையிலியே குருவிங்க கிளி, மயிலு இப்படி பறவைகன்னா உசுரு. அன்னைக்குப் பாருங்க, அந்த சந்தைக்கு முன்னாடி இருக்கிற "அரசமர வேப்பமர" மேடைல ஒருத்தன் குருவி வித்துகிட்டு இருந்தான். சந்தைக்கு வரப்போக இருந்த சனங்களும் கூடி நின்னு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாங்க குருவிக்காரன் ரூவா அம்பதுன்னு ஏலத்தை ஆரம்பிச்சான் சரவணன் அய்யாவுக்குத்தான் பறவைகன்னா உசுரு ஆச்சே. 

"இந்தக் குருவி சாதாரணக் குருவி இல்லீங்கோ, பேசும் பாடும், அம்பது ரூவா, அம்பது ரூவா!" 

கூட்டத்துல இருந்த இனியொருத்தர், "அறுபது ரூவா!" 

சரவணன் அய்யா, "நூறு ரூவா!" 

கூட்டத்துல இருந்த வேறொருத்தர், "நூத்தி அம்பது 

இப்படியே ஏலம் விறு விறுப்பாய் போச்சு. சந்தைக்கு வந்த சனமெல்லாம் கூடி நின்னு வேடிக்கை பார்த்தார்கள். 

சந்தைல பொரி காத்துல பறக்குது. கொய்யாப் பழத்தை காக்காய்ங்க கொத்தித் திங்குது. ஆனா, வித்து யாவாரம் பண்ண வந்தவிங்க கடைய விட்டுப்போட்டு, இங்க வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க, அந்த அளவுக்கு ஒரே விறுவிறுப்பான ஏலம் ஏலத்தொகை எண்ணூறு ரூவா ஆனவுடனே ஏலம் கேக்குறவங்க எண்ணிக்கை குறைந்து போச்சு. ரெண்டே பேருதான் இப்ப. அதுல நம்ப சரவணன் அய்யாவும் ஒருத்தர். 

சரவணன் அய்யா, "யார்றா அது, ஏட்டிக்குப் போட்டியா இந்தா நான் சொல்லுறேன், எண்னூத்தி அம்பது ரூவா!" 

ரெண்டொரு நிமிசங் கழிச்சு, "தொளாயிரத்து ஒண்ணு" மறுபக்கத்துல, "தொள்ளாயிரத்து அம்பது!" 

கோவத்துல சரவணா அய்யா கூட்டத்தைப் பாத்து, "டேய் நீ யார்றா? வேணாம்! இந்தா சொல்லுறேன் ஆயிரம் ரூவா!" குருவி விக்க வந்தவன், "சரிங்க அய்யா, கோவப்படாதீங்க இனி இதுக்கு மேல யாரு எவ்வளவு குடுத்தாலும் குருவி உங்களுக்குத்தான், நீங்க சொன்ன அதே ஆயிரம் ரூவாய்க்கு!" 

அய்யாவுக்கு ரொம்ப சந்தோசம், இராகி வித்த காசுல ஆயிரத்த எடுத்து குடுத்துப் போட்டு, குருவிய வாங்கும் போது "என்னடா, குருவி கொழு கொழுன்னு நல்லாத்தான் இருக்கு, பேசுமல்லோ குருவி வித்தவன் துண்ட எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா பவ்யமா, "அய்யா, என்ன இப்படிக் கேட்டுப் போட்டீங்க? இந்நேரம், உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்…"

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

Learn More